தொழிலாளர்கள் போராட்டத்தால் சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.750 கோடி இழப்பு: உயர் நீதிமன்றத்தில் நிறுவனம் தகவல்
சென்னை: சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்ய தொழிற்சங்க பதிவாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் துணை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி அதன் செயலாளர் எல்லன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினார்.
அப்போது, சங்கத்தை பதிவு செய்ய ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாம்சங் தரப்பு வழக்கறிஞர், சங்கம் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. தங்களது நிறுவன பெயரை சேர்க்காமல் சங்கத்தை பதிவு செய்து கொள்ளலாம். தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டத்தால் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாம்சங் என்ற பெயரில் கொரியாவில் தொழிற்சங்கம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தை எதிர் மனுதாரராக சேர்க்க தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து, தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


