பழைய கட்டிடத்தை அகற்றியபோது இரும்பு மேற்கூரை சரிந்து 2 தொழிலாளர்கள் பலி: வெட்டுவாங்கேணியில் பரிதாபம்
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணி பகுதியில் ஜெம் கிரானைட் என்ற கம்பெனி இயங்கி வந்தது. இதனை அங்கிருந்து காலி செய்து விட்டதால், பழைய கட்டிடம் மற்றும் மேற்கூரையை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையை சேர்ந்த அஹமது இப்ராஹிம் என்பவர், இந்த பணியை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 4 வருடங்களாக பணிபுரியும் ஒடிசாவை சேர்ந்த பாபு மாலிக் (32), சசிகாந்த் மாலிக் (42) உள்ளிட்ட 4 பேர், இந்த கம்பெனி வளாகத்தில் தங்கி, பழைய கட்டுமானத்தை பிரித்ததெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று கட்டிடத்தின் மேற்கூரையை பிரித்தபோது, எதிர்பாராதவிதமாக இரும்பு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பாபு மாலிக், சசிகாந்த் மாலிக் ஆகிய இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


