*குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வீரமணியின் மகன் முத்து சிவா (21). கூலி தொழிலாளியான இவர், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வேலைபார்த்து வந்த இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணி முடிந்தபிறகு சக பணியாளர்களுடன் பெரிய ஏணி ஒன்றை தூக்கிச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக செல்லும் மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கிவீசப்பட்ட முத்துசிவா, முத்தையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (39), ஆத்துரைச் சேர்ந்த திரவியத்தின் மகன் கார்த்திக் (23), வடக்கு ஆத்தூரைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சரவணகுமார் (19) ஆகிய 4 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே முத்துசிவா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முத்துசிவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை முன்பாக திரண்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்களை தடுத்துநிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.