எந்த சூழ்நிலையில் பிறப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையில் பிறந்தாலும் ஜெயிக்கலாம் என்பது மட்டும் எல்லோரும் அறியவேண்டிய உண்மை. இதை நிரூபிக்கும் உதாரணங்களுக்கு நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் நாட்டில் ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்து, இந்திய தேசத்தின் ஜனாதிபதியாகவும், அணுவிஞ்ஞானியாகவும், ஏவுகணை நாயகனாகவும் உயர்ந்த உலக உத்தமர் கலாம் அவர்கள் நமக்கெல்லாம் மிகச்சிறந்த உதாரணம்.ஆகவே உங்களுடைய அறிவாற்றலை வளர்த்தால் போதும்...இந்த உலகம் உங்களை தேடி வரும். வாசல்கள் தோறும் வாய்ப்புகள் இருக்கும்.திறமைகள் இருந்தால் அவை நம்மை ஓடிவா! என்றுஅழைக்கும்.அறிவுத்திறனுடன் அதைச் செயலாக்கும் திறனையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.
எப்பொழுதும் சுயநினைவுடன் அதாவது,விழிப்பு நிலையில் உள்ளவர்கள்சூழ்நிலைகளுக்குள்ளாக தங்களைக் கரைத்துக் கொள்வதில்லை.ராமலிங்க அடிகளார் சொன்னார், ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று, அதாவது,எப்போதும் அறிவுதேடுவதில் பசியுடன் இருக்க வேண்டும் என்பதுடன், கொஞ்சம் வயிற்றுப் பசி இருக்கட்டும்.வயிறு முட்ட உணவை உள்ளே தள்ளிவிட்டால் சோர்வும்,தூக்கமும் தான் வரும். அப்பொழுது சிந்திக்க மூளை சரியாக வேலை செய்யாது.அறிவுப் பசியுடன் வயிற்றுப் பசியும் கொண்டிருக்கும் போதுதான் மனம் விழிப்புணர்வுடன் செயல்படுகிறது.
‘தனித்திரு’ என்பது நாம் எப்போதும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது உங்களுக்கு ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும்.அந்த தனித்தன்மை வெளிப்படும் விதமாக நீங்கள் நடந்துகொள்ளுங்கள்.உங்களுக்குள்ளாக இருக்கும் உன்னத ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். ‘விழித்திரு’ என்றால் மனம் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று அர்த்தம். கண்களை திறந்து வைத்திருப்பதல்ல... விழிப்பு நிலை என்பது ஆம்... செய்கின்ற செயலில் கருத்தூன்றி இருப்பதே விழிப்பு நிலை,மேலும் ஒவ்வொரு நாளும் நாம் பல பாத்திரங்களை ஏற்கிறோம். அதாவது குடும்பத்தில், தொழிலில் சமுதாயத்தில் என்று பல பொறுப்புகளை சுமக்கவேண்டிய சூழ்நிலையில், அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவதோடு அந்தந்தப் பொறுப்புகளை ஈடுபாட்டுடனும், முழு மனதுடனும் செய்து முடிக்க வேண்டும். வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஏற்கும் வேடத்துக்குத் தக்கவாறு உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு அந்தந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்ட வேண்டும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
ஆப்கானிஸ்தானில் பிறந்து, அகதியாக ஈரானில் வளர்ந்தவர் ஜாரா யகனா. அகதிகளின் வாழ்க்கை கடினமானது. ஜாராவின் அம்மா கடின உழைப்பாளி. தன் குழந்தைகளுக்கு அனைத்து வேலைகளையும் பழக்கினார். சிறுவயதில் இருந்தே ஜாராவுக்கு படிப்பின் மீது அளவற்ற ஆர்வம்.அம்மாவின் பார்வையில் பொறுப்பற்ற குழந்தையாகத் தெரிந்தார். 11 வயதில் சமையல் செய்யும்போது தீய்ந்து போவது தெரியாமல், விக்டர் ஹ்யுகோ எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தார் ஜாரா.அம்மாவுக்கு வந்த கோபத்தில் அடி பின்னி விட்டார். ஆனாலும் சமையலை விடப் புத்தகங்களே ஜாராவை ஈர்த்தன.13 வயதில் திருமணம்.அவரை விட இரண்டு மடங்கு வயது அதிகமான கணவர்.தாம்பத்தியம் குறித்து எதுவும் அறியாத ஜாரா, அன்று இரவு கணவரின் அறைக்குள் நுழைந்தார். கண்விழித்துப் பார்த்தபோது ஒரு மருத்துவமனையில் படுத்திருந்தார். ஒரே இரவில் திருமண வாழ்க்கை அவருக்கு நரகமாக மாறி இருந்தது. அடுத்த ஆண்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜாரா. பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த அந்தக் குழந்தை நான்கே ஆண்டுகளில் இறந்தும் போனதுஇந்த நிலையில் ஜாராவிடம் சண்டை போட்டுவிட்டு அவரது கணவர் வீட்டில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் ஜாராவின் வீடு தீப்பற்றி எரிந்தது. இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேற முயன்றார். கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூன்று பேரையும் காப்பாற்றினர்.
இனியும் கணவருடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்த ஜாரா. கிடைக்கும் வேலைகளைச் செய்து, குழந்தைகளைக் காப்பாற்றினார்.ஒரு நண்பர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் வேலை கிடைத்தது. அம்மா கற்றுக் கொடுத்த சமையலும் ஜாராவின் படிப்பும்,புதிய வாழ்க்கைக்குக் கை கொடுத்தன. தானே மீண்டும் வாழ்க்கையைக் கட்டமைத்தார். குழந்தைகளைப் படிக்க வைத்தார். நாடகங்களில் பங்கேற்றார். பெண் உரிமைகள் தொடர்பான இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னிடம் இருக்கும் எழுத்துத் திறமையை கொண்டு தன்னை ஒருஎழுத்தாளராக உருவாக்கிக் கொண்டார். தன் வாழ்க்கையை மையமாக வைத்து பெண்கள் படும் துயரங்களை நாவலாக எழுத ஆரம்பித்தார்.Light of ashes என்கின்ற பெயரில் அது புத்தகமாக வெளிவந்தது.மூன்றே மாதங்களில் ஆயிரம் பிரதிகள் விற்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக விற்ற புத்தகம் என்கிற சிறப்பையும் பெற்று இருக்கிறது ஜாராவின் நாவல்.
என் மகளும் நானும் எங்கள் சொந்தப் பெயரிலேயே நாவலில் வருகிறோம். அதிகாரம் என்பது இரு பாலினருக்கும் பொதுவானது. சமூகம் விவாதிக்காத பெண்களின் பல பிரச்னைகளை இந்த நாவல் மூலம் சொல்லி இருக்கிறேன்.இந்த நாவலைப் படிக்கும் ஆண்கள் தாங்கள் இப்படிப்பட்ட ஒரு ஆணாக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர்.இது ஒரு நல்ல மாற்றம். என் தோழிகளின் கணவர் நாவலைப் படித்த பிறகு வீட்டு வேலைகளில் தோழிக்கு உதவி செய்து வருவதாக சொன்னார். சமூகத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது நாவலின் வெற்றிதான். என் முதல் மகள் நர்கீஸின் மரணம் குறித்து எழுதும்போது மிகவும் துன்புற்றேன். என்னால் மூன்று மாதங்களுக்கு எழுதவே முடியவில்லை நாவலை படிப்பவர்களும் என்னை போலவே உணர்வதாக சொல்கிறார்கள் என்கிறார் ஜாரா.
நீங்கள் ஒரு பெண்ணாக உங்கள் உரிமைகள் குறித்துப் பேசும்போது எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆண்களுக்கு எதிரானதாக பார்க்கப்படும். உங்களை எப்படி தடுத்து நிறுத்தமுடியும் என்று யோசிப்பார்கள். அதற்காக அநியாயங்களைக் கண்டும் காணாமல் வாழக்கூடாது, இன்று நம் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் தான் நம்முடைய எதிர்காலத் தலைமுறைப் பெண்கள் இந்த உலகில் மதிக்கப்படுவார்கள் என்கிறார் எழுத்தாளர் ஜாரா. காற்றை எதிர்த்துப் பட்டம் செல்வதைப்போல எதிர்ப்புகளை எதிர்த்துத்தான் வாழ்க்கையில் உயர வேண்டும்.எதிர்ப்புகளைக் கண்டு முடங்கிவிடக் கூடாது. முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.சாதாரண மனிதன் பல வழிகளில் முயற்சிக்கிறான். ஆனால் சாதனை மனிதன் பற்பல வழிகளில் முயற்சிக்கிறான்.ஆகவே எத்தகைய பிரச்னைகளாக இருந்தாலும், இவரைப்போல நமக்கான வாய்ப்பை நாமே உருவாக்கிக் கொண்டு பல்வேறு கோணங்களில் சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி உறுதி.