Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய சரித்திரம் படைக்க முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்!

வாழ்க்கையில் சாதனைபுரிய யாருக்குத்தான் ஆசை இல்லை. எல்லோருக்கும் உண்டு,அது மனித இயல்பு. ஆனால் பலரின் ஆசை வெறும் ஆசையாக மட்டுமே இருந்து நிறைவேறாத ஆசையாக போய்விடுகிறது. வாழ வேண்டும், சாதிக்க வேண்டும் எனும் வைராக்கியத்தை நாம் மரங்களிலிருந்து கற்றுக் கொள்ளலாம். பலமற்ற மரம் முருங்கை, காற்று அதை ஆட்டிப் பார்ப்பது மட்டுமல்ல, அடியோடு வீழ்த்தியும்விடுகிறது. ஆனால் வெட்டி எறிந்த முருங்கை வெற்று முருங்கைத் துண்டு கூட மண்ணில் புதைந்து வேர் விட தொடங்கி விருட்டென்று எழுந்து விஸ்வரூபம் காட்டுகின்றது. முருங்கை மரத்தின் வெட்டிய துண்டு கூட தழைக்கிறது.

எனவே, சாதிக்க வேண்டும் என்பதை மனதில் ஒருமுகப்படுத்தி உழைப்பை ஒரே நோக்கில் செலுத்தி குறிக்கோளை தீர்மானியுங்கள். அப்படி ஒரு குறிக்கோளைத் தீர்மானித்து இந்த உலகில் மிகச்சிறந்த வெற்றி பெற்ற ஒருவரை இன்றைய மாணவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாராயணனின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் எளிமையானது. 9ஆம் வகுப்பு படிக்கும் வரை அவரது வீட்டில் மின்சாரமே இல்லை.மண்ணெண்ணெய் விளக்கேற்றி அதன் வெளிச்சத்தில் படித்தவர்.அவரது கிராமத்தில் பள்ளியும் இல்லை.அதனால் அருகில் உள்ள கீழக்காட்டுவிளையில் ஆரம்பப்பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பின், 8ஆம் வகுப்பு வரை தினமும் ஒரு மைல் துாரம் பயணித்து பள்ளிக்கு சென்றவர் மீதமுள்ள பள்ளிப் படிப்பை மாவட்டத் தலைநகரமான நாகர்கோவிலில் படித்து முடித்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த அவர், மெக்கானிக்கல் எஞ்ஜினீயரிங்கில் டிப்ளமோ பயின்றார். பின், AMIE-ல் சேர்ந்து கிரையோஜெனிக் பொறியியலில் M.Tech முடித்தார். கரக்பூர் IIT-ல் விண்வெளிப் பொறியியலில் Ph.D பட்டம் பெற்றார். ஐஐடி கரக்பூரில், 2001ம் ஆண்டில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். எம்.டெக் பட்டப்படிப்பை ஃபர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றார். இதுவே கிரையோஜெனிக்ஸ் துறையில் அவரது கூர்மையான புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும்.

எளிமையான குடும்பப் பின்னணியை சேர்ந்தவர். குடும்ப கஷ்டம் காரணமாக கிராமத்தில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட நிலையில்,‘என் பெற்றோர் எனக்குக் கல்வியைத் தொடர வாய்ப்பளித்தது எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தேன்’ என்கிறார் நாராயணன்.

பின்னர், அவருடைய தந்தை ஒருவரிடம் தனது மகன் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தால் வேலை கிடைக்கும் என்று அவர் சொல்லி உள்ளார். ஆனால், இந்தப் படிப்பில் சேர்ந்த பிறகு தான், பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். இருப்பினும், தொடர்ந்து படித்து மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார். கேம்பஸ் இண்டர்வியூவில் வேலையும் கிடைத்தது.

ஆனால், வேலையில் சேருவதா அல்லது படிப்பைத் தொடருவதா என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தது. அவருடைய தந்தை படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், நிதிப் பிரச்னை இருந்ததால்,நாராயணன் வேலையை ஏற்றுக்கொண்டார். வேலை செய்துகொண்டே அரசு வேலையைத் தேடும் முயற்சியில் இறங்கினார். இஸ்ரோவில் இணைவதற்கு முன், TI சைக்கிள்ஸ், மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை, இறுதியாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இஸ்ரோவில் சேர்ந்தவுடன், எஞ்ஜினீயரிங்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். கடவுளின் அருளால், ஐஐடி கரக்பூரில் தனது முனைவர் பட்டத்தை முடித்து, கிரையோஜெனிக் திட்டத்துடன் தனது பயணத்தைத் தொடங்கமுடிந்தது என்கிறார் நாராயணன்.

நாராயணனின் இஸ்ரோ பயணம், 1984ம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் திட உந்துவிசையில் பணியாற்றுவதற்காக சேர்ந்தபோது தொடங்கியது. அங்கு அவரளித்த பங்களிப்புகள் கேரளாவில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (Liquid Propulsion Systems Centre-LPSC) கிரையோஜெனிக் உந்துவிசையில் அவரது பிற்காலப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தன.

இஸ்ரோவின் வெற்றியில் நாராயணனின் உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் மிக முக்கியமானது. கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். திட்ட இயக்குநராக, இந்தியாவின் மிகப்பெரிய பேலோடுகளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் LVM3 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கிய குழுவிற்கு நாராயணன் தலைமை தாங்கினார். அவரது பணி, இந்தியா கிரையோ ஜெனிக் என்ஜின்களை உருவாக்கிய உலகின் ஆறாவது நாடாக மாற உதவியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியதில் பின்னடைவைச் சந்தித்த சந்திரயான்-2 திட்டத்திற்கான உந்துவிசை அமைப்புகளையும் நாராயணனின் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

பின்னர், தோல்வி பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் தோல்விக் கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்தல் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார். இந்த மேம்பாடுகள் 2023ம் ஆண்டில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்க உதவி, சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

2018ம் ஆண்டு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் பெற்றார். டாக்டர் நாராயணன் ராக்கெட் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ASI விருதையும், இந்திய விண்வெளி சங்கத்திடமிருந்து (ASI) தங்கப் பதக்கத்தையும் பெற்றார். சிறந்த சாதனையாளர் விருது, செயல்திறன் சிறப்பு விருது மற்றும் குழு சிறப்பு விருது உட்பட பல இஸ்ரோ விருதுகளை அவர் வென்றுள்ளார். இந்நிலையில் இந்திய விண்வெளித் துறையில் அவர் ஆற்றிய மகத்தான பணிகளின் அங்கீகாரமாக, இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொறுப்பில், நாராயணன் பல மகத்தான பணிகளை மேற்கொள்ள விருக்கிறார். அவரது தலைமையின் கீழ், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் மிஷன் மற்றும் வரவிருக்கும் சந்திரயான்-4 மிஷன் உள்ளிட்ட முக்கியமான விண்வெளிப் பணிகளை இஸ்ரோ தொடரவிருக்கிறது. எல்பிஎஸ்சியில் உள்ள நாராயணனின் குழு, இந்தியாவின் எதிர்கால விண்வெளி நிலையத்திற்கான கனரக வாகனம் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் மிஷன் உள்ளிட்ட புதிய தலைமுறை ஏவுதள வாகனங்களை உருவாக்குவதிலும் பணியாற்றி வருகிறது.

இவரைப் போலவே வாழ்வில் சாதிக்க வேண்டுமென்றால் உங்கள் எண்ணம், சொல்,செயல் எல்லாம் அதையொட்டியே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கு எதுவோ அதை நோக்கி முழு மூச்சாக ஈடுபடுங்கள். நீங்களும் வெற்றியாளர்தான். புதிய சரித்திரம் படைக்க முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.