வருசநாடு : மயிலாடும்பாறை அருகே, மழைவெள்ளத்தால் பாலத்தில் சிக்கிய மரக்கட்டைகளை அகற்றும் பணி நடைபெற்றது.மயிலாடும்பாறை-பொன்னன்படுகை சாலையின் இடையே, மூலவைகை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக, ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளநீர், பல்வேறு இடங்களில் இருந்து மரக்கட்டைகளை இழுத்து வந்தது.
சிறிய அளவிலான மரக்கட்டைகள் பொன்னம்படுகை பாலத்தை கடந்து சென்று விட்டது. ஆனால் பெரிய அளவிலான மரக்கட்டைகள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அங்கேயே சிக்கி நின்றது. இதனால் அடுத்தடுத்து வந்த மரக்கட்டைகளும் அதே இடத்தில் சிக்கி தேங்கி நின்றன.
இதன் காரணமாக பாலத்தின் கீழ் மூன்று தூண்களில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் மற்ற இரண்டு தூண்கள் வழியாக வெளியேறியது.
இந்நிலையில் மீண்டும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர் செல்ல வழியில்லாமல் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் நிலவியது. இதனால் பாலத்தில் சிக்கியுள்ள மரக்கட்டைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று கடமலை-மயிலை ஒன்றிய நிர்வாகத்தினர், பாலத்தின் கீழ் சிக்கியுள்ள மரக்கட்டைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை நடைபெற்ற பணிகளில் பாலத்தின் கீழ் சிக்கியிருந்த மரக்கட்டைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
