கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி செம்பட்டரை கிராமம் சின்னமலை சிங்கார வேலன் கோயில் மலை மீதுள்ளது. மூலவராக இருப்பவர் முருகர். இக்கோயிலில் வழிபட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஆடிக்கிருத்திகை, மயிலார் பண்டிகை, கந்த சஷ்டி, தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட முருகனுக்கு விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு விஷேச நாட்களில் வந்து செல்லும் இக்கோயில் மலை மீது இருப்பதால் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிமெண்ட்டில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மழையால் கடந்த 2 நாட்களுக்கு முன் சின்னமலை சிங்காரவேலன் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சுற்றுசுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து கோயில் தரை பகுதியில் இருந்த கற்பூரம் ஏற்றி வழிபடும் பீடம், அங்கு பக்தர்களுக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, மின்விளக்குகளுடன் கூடிய கம்பம், அன்னதான கூடம், சமையல் கூடம், பக்தர்கள் அமரும் இடம் ஆகியவை தொடர்ந்து சரிந்து விழுந்தது. இதனால் கோயிலின் மூன்றின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதியில் உள்ள இடர்பாடுகளை அகற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று தாசில்தார் பலராமன் தலைமையில் அதிகாரிகள் கோயிலின் சரிந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த இடர்பாடுகளை ஜே.சி.பி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.