கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரின் 18வது போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இலங்கை- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே 12 ரன் எடுத்த நிலையில் காயத்தால் வெளியேறினார். பின், கேப்டன் சமாரி அத்தப்பட்டு 11, ஹாசினி பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். 12 ஓவரில் இலங்கை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த் லீயிஸ் விதிப்படி 20 ஓவரில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய வோல்வோர்ட் 60 ரன்னும், தஜ்மின் பிரிட்ஸ் 55 ரன்னும் எடுத்தனர். முடிவில் தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிபட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
+
Advertisement