விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் இன்று, இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதவுள்ளன. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்று 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகிய மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த 2 போட்டிகளில் இந்த மூவரும் சொதப்பியதால் இந்தியா குறிப்பிடத்தக்க ரன்களை குவிக்க முடியவில்லை. தென் ஆப்ரிக்கா அணி லாரா உல்வார்ட் தலைமையில் களமிறங்க உள்ளது. அந்த அணி, கடந்த 2 போட்டிகளில் தட்டுத்தடுமாறி ஒன்றில் வெற்றி பெற்று, 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்த முற்படும் என்பதால் போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.