லண்டன்: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 8 நாடுகள் மோதும் இத் தொடரின் முதல் போட்டி, வரும் 30ம் தேதி, கவுகாத்தியில் இந்தியா - இலங்கை இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அறிவித்தது. கடந்த 2022ல் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின்போது, ரூ.30 கோடி மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. அதுபோல், தற்போதைய போட்டியில், 4 மடங்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்தொகை, கடந்த 2023ல் நடந்த ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை (ரூ.88 கோடி) விட அதிகம். தற்போது நடைபெறவுள்ள மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெல்லும் அணிக்கு, ரூ.39 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் அணி, ரூ.20 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு, ரூ.9.9 கோடியும் பரிசாக கிடைக்கும்.