இந்தூர்: இந்தூரில் நேற்று நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 7வது போட்டியில், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீராங்கனை சுஸி பேட்ஸ் முதல் பந்திலேயே, ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின் வந்தோரில் கேப்டன் சோபி டிவைன் மட்டும் சிறப்பாக ஆடி 98 பந்துகளில் 85 ரன் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால், 47.5 ஓவரில், நியூசி. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன் மட்டுமே எடுத்தது. அதையடுத்து, 232 ரன் வெற்றி இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஆட்டத்தை துவக்கிய கேப்டன் லாரா உல்வார்ட் 14 ரன்னில் அவுட்டானார். பின்னர், டாஸ்மின் பிரிட்ஸ், சூன் லூஸ் இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். அசத்தலாக ஆடிய டாஸ்மின் பிரிட்ஸ் 89 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 101 ரன் எடுத்து அவுட்டானார். அதன் பின், 40.5 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்து தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சூன் லூஸ் ஆட்டமிழக்காமல் 81 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
+
Advertisement