Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் "மதி தீபாவளி பரிசுப் பெட்டகம்" விற்பனை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட பல்வேறு விற்பனை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தீபாவளியினை முன்னிட்டு ரூ. 500/- முதல் ரூ. 2500/- வரையிலான மதிப்பு கொண்ட "மதி தீபாவளி பரிசுப் பெட்டகம்" (Mathi Diwali Gift Hampers) கைபேசி எண் வாயிலாக மொத்தம் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேஷ்டிகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப் பொருட்கள், வாழைநார் கூடைகள், கோரையில் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், பல்வேறு பொருட்களைக் கொண்ட பரிசுப் பெட்டகங்கள், உலர் பழங்களில் செய்யப்பட்ட சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த லட்டுகள், உலர் திராட்சை வகைகள், தரமான முந்திரிப் பருப்புகள், கற்சிற்பங்கள், சுடுமண்ணில் செய்யப்பட்ட ஆபரணங்கள், தரமான செக்கு எண்ணை வகைகள், ஒளித்திருவிழாவிற்கு மேலும் ஒளிக்கூட்டும் வண்ண மெழுகுவர்த்திகள், உணவுக்கு மணமூட்டும் மசாலாப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ஆகிய பயனுள்ள பொருட்கள் 17.10.2025 முதல் 20.10.2025 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் 10 லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிடவும், முன்பதிவு செய்திடவும்

"76038 99270" என்ற கைப்பேசி எண்ணை அழைக்கவும். வாடிக்கையாளர்கள் பரிசுப் பெட்டகம் மட்டுமன்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருட்களை தனித்தனியாகவும் தேர்ந்தெடுத்து வாங்கி மகிழலாம்.

மேலும் தொடர்புக்கு மதி அனுபவ அங்காடி, அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை-600 034.

சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.