கொழும்பு: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச அணியின் சிறப்பான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேச அணியில் பந்துவீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவக்கம் முதலே துவம்சம் செய்த வங்காளதேச அணியின் வீராங்கணைகள் 3 விக்கெட் இழப்பிற்கு 31.1 ஓவரிலேயே 131 ரன் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றனர். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரூபியா ஹைடர் 77 பந்தில் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.