ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி; விறுவிறு போட்டியில் டிரா செய்த இந்தியா: வெற்றியை விளிம்பில் தவறவிட்ட ஜப்பான்
ஹாங்சூ: ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று, இந்தியா - ஜப்பான் அணிகள் இடையே நடந்த பரபரப்பான போட்டி, டிராவில் முடிந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள், சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகின்றன. பி பிரிவில், முதல் போட்டியில் தாய்லாந்து அணியை, 11-0 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வெற்றி வாகை சூடியிருந்த இந்திய அணி, நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஜப்பான் அணியுடன் மோதியது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் ஜப்பான் முதல் கோலை போட்டது. அதன் பின், 30வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா பிஸால் அணியின் முதல் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தார்.
போட்டி முடிய 3 நிமிடங்களே இருந்தபோது ஜப்பான் மீண்டும் ஒரு கோல் போட்டு அசத்தி, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதையடுத்து கோல் போடும் முயற்சியில் இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டினர். போட்டி முடிய வெறும் 40 விநாடிகளே இருந்த சமயத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி அணியின் 2வது கோலை போட்டார். அதனால், 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, நாளை நடக்கும் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது.