Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் ஆணையம் பரிந்துரையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என் குழந்தை என டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானால் கவனித்து கொள்வேன்

* தனிப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டியதால் திருமணம் செய்தேன்

* ஜாய்கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: குழந்தை என்னுடையது என டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானால் கவனித்து கொள்வேன் என்றும், என்னை தனிப்பட்ட வீடியோக்களை வைத்து ஜாய் கிரிசில்டா மிரட்டியதால் தான் திருமணம் செய்தேன் மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தனனை 2வது திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் சிரிசில்டா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் படி கடந்த மாதம் ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரிடம் மகளிர் ஆணையம் தலைவர் குமாரி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது உண்மை என்றும், அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் ஒப்புக்கொண்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்தது. திருமணம் நடந்தது மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு ‘டிஎன்ஏ’ பரிசோதனை தேவையில்லை. அதேநேரம், ஜாய் கிரிசில்டாவை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து

உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி சுருதி மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவரின் கையெழுத்து போட்ட அறிக்கை ஒன்று நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில், மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பல முறை மிரட்டியதால் இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

செப்டம்பர் 2025ல் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். மகளிர் ஆணையம் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதம் ரூ.1.50 லட்சம் பராமரிப்பு தொகையாகவும், தனது பிஎம்டபிள்யூ காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர தவணையும் செலுத்த வேண்டும் என்று கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.

நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்த குழந்தை என்னுடையது என்று அறிவியல்பூர்வமாக (டிஎன்ஏ) நிரூபிக்கப்பட்டால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்து கொள்வேன் என்று கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பு செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.