புதுடெல்லி: மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவியுள்ள இந்திய மகளிர் அணி, மீதமுள்ள, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுடனான 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பைக்காக ஆடியுள்ள 5 ஒரு நாள் போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த 3 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவியதால் அரை இறுதியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மங்கி வருகிறது.
இந்திய அணி, 4 புள்ளிகளை மட்டுமே பெற்று, +0.526 நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுடன் நடக்கும் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, வரும் 26ம் தேதி நடக்கும் போட்டியில் வங்கதேசத்துடன் இந்தியா மோதுகிறது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால், அரை இறுதிக்கான இடம் உறுதியாகும். நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியுற்றால், இங்கிலாந்துடன் நடக்கும் கடைசி போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டும்.
தவிர, வங்கதேசத்துடனான போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். இதைத் தவிர, இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பும் காணப்படுகிறது. இந்திய அணி, நியூசியிடம் வென்று, வங்கதேசத்திடம் தோல்வி அடையும் பட்சத்தில், இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றால், நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம்.