மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளை வங்கிக் கடன் இணைப்புகள், அடையாள அட்டைகளை வழங்கவுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், அடையாள அட்டைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வழங்கவுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 16.09.2025 அன்று சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விழாப் பேருரையாற்றி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க உள்ளார். கலைஞர் , மகளிரின் பொருளாதார சுயசார்பிற்காகவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்திடும் வகையிலும், 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக சுய உதவிக் குழு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக் கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ், தமிழ்நாடு துணை முதலமைச்சர், மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதிகளில் 3,38,985 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1,47,671 சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 55,45,043 உறுப்பினர்கள் உள்ளனர். 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, 03.09.2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 19 லட்சத்து 68 ஆயிரத்து 58 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 55 லட்சத்து 84 ஆயிரத்து 754 நபர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் 16.09.2025 அன்று சேலம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளையும் வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.