Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு!!

சென்னை: உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். நவி மும்பையில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்களை குவித்தது. உலக சாதனை இலக்கான 339ஐ நோக்கி இந்தியா ஆடியது. நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா எதிர்பாராது அவுட் ஆக, ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பாக ஆடினர்.

வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அட்டகாசமாக ஆடிய ஜெமிமா அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார். இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதே மைதானத்தில் ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.

இந்நிலையில், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; என்ன ஒரு அற்புதமான வெற்றி! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் ஒருமுறை நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளது!

அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127)* மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (89) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள். இந்த சாம்பியன்களின் உற்சாகம், மன உறுதி மற்றும் உறுதிப்பாடு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. உலகக் கோப்பையை வென்று வாருங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.