நவி மும்பை: மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. நவி மும்பையில் நேற்று நடந்த 24 லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நியூசிலாந்து பவுலர்களை பந்தாடி பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
இந்த ஜோடி 33.2 ஓவரில் 212 ரன் எடுத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 109 ரன்னில் (95 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 122 ரன் (134 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். மழை குறுக்கிட்டதால் 49 ஓவராக போட்டி மாற்றப்பட்டது. 49 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 340 ரன் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன் (55 பந்து, 11 பவுண்டரி), ரிச்சா கோஷ் 4 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
* மந்தனா சாதனை
மந்தனா இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் 2வது இடத்துக்கு (14 சதங்கள்) முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதேபோல், ஒரு ஆண்டில் அதிக சதங்கள் (5) அடித்த தென் ஆப்ரிக்கா வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையை மந்தனா சமன் செய்தார்.
