சிவகாசி: வரும் 12ம் தேதி முதல் இன்னும் கூடுதல் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் இல்ல திருமண வரவேற்பு விழா சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகளிருக்கு பல சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கட்டணம் இல்லாத விடியல் பயணத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இந்த பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சகங்களில் வேலை செய்யும் பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 சேமிக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமை தொகை மூலம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் ரூ.1,000 மாதந்தோறும் பெற்று வருகிறார்கள். வரும் டிச. 12ம் தேதி முதல் இன்னும் கூடுதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் தான் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு நமது முதல்வர் கொண்டு வந்துள்ள பல திட்டங்கள் தான் காரணம். இதை பொறுக்க முடியாமல் தான் ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. நிதி உரிமையை பறிக்கிறார்கள். எஸ்ஐஆர் என்று கூறி நமது வாக்குரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள். எம்பி தொகுதி எண்ணிக்கைகளை குறைக்க பார்க்கிறார்கள். இந்த இடையூறுகளை தாண்டி முதல்வர் தமிழகத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் திமுகவுக்கு உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
* காதலும்... கஷ்டமும் துணை முதல்வர் ருசிகரம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘மதுரை விமான நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது தான், இது காதல் திருமணம் என்று கூறினார்கள். காதல் திருமணம் மிகவும் எளிதானது என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதில் அதிக கஷ்டப்பட வேண்டி இருக்கும். பெண்ணோ, பையனோ தங்களுக்கு பிடித்தவர்களிடம் ப்ரப்போஸ் செய்து காதலை வெளிப்படுத்துவதுதான் முதல் கஷ்டம். பிறகு சம்மதம் வாங்க வேண்டும். அதன் பின்னர் காதல் திருமணத்துக்கு பெற்றோரை சம்மதிக்க வைப்பது அடுத்த கஷ்டம். அடுத்து உறவினர்களை சமாதானம் செய்வது. இப்படி பல கஷ்டங்களை கடந்துதான் காதல் திருமணங்கள் நடக்கிறது’’ என்றார்.

