சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு திருமங்கலம் தொகுதி உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து துணை முதல்வர் மகிழ்ச்சிகரமான செய்தியை சொன்னார். மக்களுக்கு ஒரு திட்டம் அறிவிக்கிறபோது அரசின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா அல்லது தேர்தலுக்கு தேர்தல் அந்த அணுகுமுறை மாற வேண்டுமா?
2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, எப்போது அதை கொடுக்கிறீர்கள்? நாடாளுமன்றத் தேர்தல் வருகிறபோது அந்தத் தொகை அனைவருக்கும் தரப்படும் என்று சொல்கிறீர்கள். அதற்குப் பிறகு அதிலே நிபந்தனை விதிக்கிறீர்கள். பின்னர் நீங்கள் வகுத்த விதிமுறைகளை, நீங்களே இப்போது தளர்த்துகிறீர்கள். யார் யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோ, அவர்களெல்லாம் மீண்டும் மனுக்களை அளியுங்கள். அதற்கென நாங்கள் ஒரு முகாம் அமைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறீர்கள்.
அமைச்சர் எ.வ.வேலு: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சியினர் தயார் செய்கிறார்கள். இந்த ஆண்டே அவற்றை நிறைவேற்றுகிறோம் என்று எந்த ஆட்சியிலாவது அவை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: இவ்வளவு அக்கறையோடு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி கேட்கிறார். ஜி.எஸ்.டி. 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்து, வரியை வசூலித்து, அள்ளி குவித்து உள்ளே சுவாகா செய்துவிட்டு, இப்போது ஜிஎஸ்டியில் ஒரு தளர்வை கொடுக்கிறார்கள். அதைத் தற்போது நீங்கள் கொண்டாடுகிறீர்களே அது என்ன?.
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): மகளிர் உரிமைத் தொகையை, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அனைத்து தாய்மார்களுக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னீர்கள். அப்படி முழுமையாகக் கொடுங்கள். விடுபட்டுள்ள 22 மாதங்களுக்கும் சேர்த்துக் கொடுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.