தமிழ்நாட்டில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு
மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையின், மதுரை வழக்கறிஞர்கள் சங்கம்(எம்பிஏ) சார்பில், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறை தொடர்பான தேர்வு எழுத விரும்பும் இளம் வழக்கறிஞர்களுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பேசிய ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார், ‘‘புதிய பிஎன்எஸ்எஸ் சட்டப்படி, இனி வரும் காலங்களில் மாவட்ட நீதிமன்றங்களில், மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட நீதிபதி என இரண்டு நிலைதான் இருக்கும்.
உதவி அமர்வு நீதிமன்றம் என்ற நிலை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நீதிபதிகளுக்கான காலிப்பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இளம் வழக்கறிஞர்கள் தற்போதே, பயிற்சியை மேற்கொள்வது நல்ல வாய்ப்பாக அமையும்’’ என்றார். நீதிபதி அனிதா சுமந்த், ‘‘இது ஒரு நல்ல முயற்சி, நன்கு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள், நீதிபதியாவது தரமான நீதி வழங்குவதற்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
இதைதொடர்ந்து பேசிய, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனெனில், தேர்வுகளில் அதிகமான பெண்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
வருங்காலங்களில் அதிகளவில் பெண் நீதிபதிகள் தேர்வாக வாய்ப்பு உள்ளது’’ என்றார். இதில், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், அப்துல் குத்தூஸ், ஸ்ரீமதி, குமரேஷ் பாபு, வடமலை, குமரப்பன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரா கதிரவன், பாஸ்கரன், சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேசன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


