திண்டிவனம்: தமிழகத்தில் சமீப காலமாக குற்றப் பின்னணி கொண்டவர்கள் தங்களை பாதுகாக்க தேசிய கட்சியான பாஜவிலும், அடுத்தபடியாக அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ஒருவர் நேற்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்ட இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐ பணி தொடங்கி, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி என எல்லா பதவிகளிலும் ஒரே மாவட்டத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறையில் பணியாற்றி வந்தார். அப்போதைய டிஜிபியுடன் ஏதோ ஒரு வகையில் மிக நெருக்கமாக இருந்ததால் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2023 ஜூலை மாதம் இவர் ஓய்வு பெற்றார்.
ஏடிஎஸ்பியாக பணியில் இருந்த காலத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓய்வு பெற்ற பெண் அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த ஏடிஎஸ்பி பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் தன்னை பாதுகாத்துக் கொள்ள பாஜவில் சேர்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் இல்லை. எப்போதும், நாங்கள் அவர்களை சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றார். அவர் கூறிய சில நாட்களிலேயே பெண் விவாகரத்தில் சிக்கிய காவல் அதிகாரியை அதிமுகவில் இணைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.