Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பலபயிர் சாகுபடியில் அசத்தும் பெண் விவசாயி!

விவசாயத்தில் பலபயிர் சாகுபடி ஒரு நல்ல யுக்தி. ஒரு பயிரில் நமக்கு வருமானம் கிடைக்காவிட்டாலும், மற்றொரு பயிர் அதை ஈடுகட்டும். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்ற பெண் விவசாயி தனது 5 ஏக்கர் நிலத்தில் பகுதி பகுதியாக பிரித்து பலபயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதுவும் முழுக்க முழுக்க இயற்கை முறையில் பராமரித்து, நல்ல வருவாயும் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அம்பாசமுத்திரம் மார்க்கெட்டிற்கு பூக்களை விற்பனைக்கு எடுத்துச்செல்ல தயாராகிக் கொண்டிருந்த இந்திராகாந்தியைச் சந்தித்தோம்.``அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள அயன்சிங்கம்பட்டிதான் எனக்கு சொந்த ஊரு. எங்களுக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதுதவிர 2.5 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். இந்த 5 ஏக்கர் நிலத்தில் கத்தரி, அவரை, சேப்பங்கிழங்கு, மஞ்சள், கீரை, மிளகாய், தட்டைபயறு, பாகல், முருங்கை, கொத்தமல்லி, தென்னை, வாழை, மல்லி, காக்கட்டான் பூ என பல பயிர்களை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் 30 சென்டில் மட்டும் மல்லி, நந்தியாவட்டை, காக்கட்டான் பூக்களை சாகுபடி செய்திருக்கிறேன். காக்கட்டான் நாற்றுகளை அருகில் உள்ள விவசாயிகளிடம் வாங்கி நட்டேன். எங்கள் நிலத்தில் ஆடு மற்றும் மாட்டு சாணத்தை மட்டுமே உரமாக பயன்படுத்துகிறோம்.

காய்கறிகள் மற்றும் மலர் நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் கிட்டத்தட்ட 300 ஆடுகளை பட்டி அமைத்து ஒரு இரவு முழுவதும் கட்டிவிடுவோம். ஒரு இரவில் ஒரு இடத்தில் பட்டி அமைத்தால், அடுத்த நாளில் இன்னொரு இடத்தில் பட்டி அமைப்போம். இவ்வாறு பட்டி அமைக்கும்போது ஆடுகளின் கழிவுகள் நிலத்திற்கு நல்ல உரமாகிவிடும். பட்டி அமைத்த பிறகு நிலத்தில் உழவு ஓட்டுவோம். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரம் உள்ள குழி எடுத்து அதில் நாற்றுகளை நடவு செய்வோம். இயல்பாகவே காக்கட்டான் செடிகளில் பூச்சிகளின் தாக்குதல் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் நாங்கள் பெரிதாக மருந்து அடிப்பது இல்லை. மாதத்திற்கு ஒருமுறை உயிர் உரங்களை எருவில் கலந்து வைப்பதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். இவை மரப்பயிர் போல் அதிகமாக வளரும். நாங்கள் அதிக உயரம் வளர்க்காமல் 7.5 அடி உயரம் மட்டுமே செடிகளை வளர்ப்போம். இதற்காக சாகுபடி முடிந்த பிறகு செடிகளை கவாத்து செய்வோம். தேவையற்ற உயரமான கிளைகளை ஒடித்து விடுவோம்.

அவ்வப்போது புதியதாக வளரும் கிளைகளின் நுனிகளை கிள்ளிவிடுவோம். இப்படி செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். செடிகள் வளரும் வரை தினமும் தண்ணீர் விடுவோம். ஒரு மாதத்திற்குப் பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுவோம். தற்போது வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் விடுகிறோம். செடி நடவு செய்து 3 முதல் 4 மாதத்தில் பூ வர ஆரம்பிக்கும். ஒரு செடியில் 100 கிராம் வரை பூ வருகிறது. பூ எடுக்கும்போது பச்சைக் காம்புகளுடன் ஒடித்து எடுப்போம். பூக்கள் அதிகம் வந்தால் ஆட்களை வைத்து பூக்களைப் பறிப்போம். குறைவாக இருந்தால் நாங்களே பூக்களைப் பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்வோம். காக்கட்டானை உரிய முறையில் பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய ஆறு மாதங்களுக்கு அதிகமான பூக்கள் பூக்கும். தை மாதம் மற்றும் முக்கிய விழாக்கள், முகூர்த்த தினங்களில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்போது நாங்கள் பூக்களை ஒரு கிலோ பையில் போட்டு ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.800 வரை விற்பனை செய்கிறோம். பங்குனி உத்திரத்தில் ஒரு கிலோ பூ ரூ.800க்கு விற்பனையானது. நிலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பாசமுத்திரம் மார்க்கெட்டில் பூக்களை நேரடியாக விற்பனை செய்கிறோம்.

முகூர்த்த நாட்களில் இதன் விலை கிடுகிடுவென ஏறிவிடும். மணமக்களுக்கு இந்தப்பூவில் வண்ணங்கள் தடவி, மாலை கட்டி பூ வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். சராசரியாக ஒரு கிலோ காக்கட்டான் பூ ரூ.200க்கு விற்பனையாகும். நாங்கள் தனித்தனியாக பூக்களின் வரத்தை கணக்கு வைத்துக்கொள்வது கிடையாது. மல்லி, காக்கட்டான், நந்தியாவட்டையில் ஒரு வருடத்தில் எங்களுக்கு ரூ.2 லட்சம் வருமானமாக கிடைத்தது. இதில் ரூ.20 ஆயிரம் செலவு போக ரூ.1.80 லட்சம் லாபமாக கிடைத்தது. அதேபோல் ரசாயன உரங்களை வாங்கி நிலத்தில் போடாமல் விலங்குகளின் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் ஆரோக்கியமான உணவும் கிடைக்கும். செலவும் குறையும்.

கடந்த வருடம் இயற்கை முறையில் விளைவித்த மிளகாயில் இருந்து 40 கிலோ மிளகாய் வற்றல் கிடைத்தது. இதனை ஒரு கிலோ ரூ.300 என்ற கணக்கில் விற்பனை செய்தேன். இதன்மூலம் ரூ.12 ஆயிரம் கிடைத்தது. இதேபோல் மஞ்சள் மற்றும் சேப்பங்கிழங்கை ஒரு சென்டில் வைத்திருந்தேன். இதனை அறுவடை செய்து விற்பனை செய்ததில் ரூ.3000 கிடைத்தது. நாட்டு ரக தென்னையை ஒரு ஏக்கரில் வைத்து தேங்காய்களை விற்பனை செய்ததில் ரூ.60,000 கிடைத்தது. உரச்செலவு இல்லாததால் இவை அனைத்தும் எங்களுக்கு லாபம்தான். தண்டுக்கீரை, காய்கறிகள், கொத்தமல்லி, மிளகாய் உள்ளிட்டவற்றை அக்கம்பக்கம் இருப்பவர்களிடமே விற்பனை செய்கிறேன். இதிலும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. விவசாயிகள் நம்மிடம் உள்ள நிலத்தை சரியான அளவில் பிரித்து பலபயிர் சாகுபடி செய்யும் பட்சத்தில், ஒரு பயிரில் நஷ்டம் ஏற்பட்டால் மற்றொரு பயிர் மூலம் லாபம் பெறலாம்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

இந்திராகாந்தி: 75985 51972 .

தேன் பெட்டிகள்

பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக இனக்கவர்ச்சிப் பொறிகளை ஆங்காங்கு வைத்திருக்கும் இந்திராகாந்தி, அவற்றுக்கு இடையே தேன் பெட்டிகளும் வைத்திருக்கிறார். தேன்பெட்டிகள் மூலம் இவருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், கீரை வகைகளையும் நேரடியாக விற்பனை செய்து வருமானம் பார்க்கிறார்.