பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் தேர்தலுக்கு முன் அரசு இலவசமாக மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்ற பொருட்களை அறிவிப்பவர்கள் ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள் என்று பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. மேலும், சி.வி சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதன் விசாரணை தொடர்பாக கடந்த அக்டோபர் 17ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அப்போது அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நேரம் கேட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 7ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி மகளிர் ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.
