ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டி நடக்கிறது. அதில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, கொரியா அணிகள் களம் கண்டன.
முன்னணி அணிக்குரிய வேகத்துடன் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே, பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் கோலடித்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 2வது பாதியில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதாகுமாரி ஃபீல்ட் கோலடித்து முன்னிலையை அதிகப்படுத்தினார். அடுத்த சில விநாடிகளில் கொரியாவின் யூஜின் கிம், பெனால்டி கார்னர் மூலம் கோலடித்து இந்தியாவின் முன்னிலையை குறைத்தார்.
அதன்பிறகு லால்ரெம்சியாமி 40வது நிமிடத்தில் ஃபீல்ட் கோலடித்து இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையை அதிகரித்தது. சிறிது நேரத்தில் பெனால்டி கார்னர் மூலம், கொரிய வீராங்கனை யூஜின் கிம் தனது 2வது கோலை அடித்தார். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது மேலும் கிடைத்த பெனால்டி கார்னரை, இந்திய வீராங்கனை ருதுஜா கோலாக மாற்றினார். அதனால் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது.