Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் எம்எல்ஏக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காவல்துறை சேதி என்ன..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘பனியன் சிட்டியில் 2,500க்கும் மேற்பட்ட போலீஸ் பணியாற்றி வர்றாங்களாம். வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்ப்பதால், கிரைம் ரேட் அதிகமாகாம இருக்க தீவிர கண்காணிப்பு, நைட் ரவுண்ட்ஸ்னு வேலை அதிக அளவுல இருக்காம். இது தவிர விஐபி பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னைன்னு ஒர்க் பிரஷர் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருக்காம். அரசு அறிவித்த வாரம் ஒரு நாள் லீவு என்ற உத்தரவு சிட்டியில் இருக்கிற பெரும்பாலான ஸ்டேஷன்களில் அமல்படுத்துவதே இல்லையாம். ஓய்வு இல்லாம வேலை செய்யறதால மனஅழுத்தம் ஏற்படுதுன்னு போலீஸ் தரப்புல சொல்றாங்க. இப்பிரச்னையை சிட்டி கமிஷனர் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கனும்னு போலீஸ் தரப்புல கோரிக்கை வைத்திருக்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலி ஆவணங்கள் தயாரிப்பால் மக்கள் பிரதிநிதி பதுங்கிக் கிடக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலா பகுதியான புதுச்சேரி யூனியனில் கரை எனும் முடிவு தொகுதி இருக்கிறதாம். இங்கு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சங்கர் பெயர் கொண்டவர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிகிறதாம். கடந்த தேர்தலின்போது நூலிழையில் தப்பி பிழைத்த சங்கரானவர், சட்டசபையிலும் தொகுதிக்காக எந்தவித குரலும் கொடுக்காத நிலையில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காமல் கடும் அப்செட்டில் உள்ளார்களாம் தொகுதி மக்கள். ஏற்கனவே சபையை வர்த்தமாக்கி வருவதாக இவர் மீது குற்றச்சாட்டு இருக்க, தற்போது அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்த விவகாரத்தில் புதிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளதாம். அதாவது தேர்தல் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள உள் ஆட்சித்துறையின் அனுமதி பெறாமலே கடந்த 2000ல் வர்த்தகமான சபைக்கு நிர்வாகிகளை அவர்களாகவே தேர்ந்தெடுத்து அதை பதிவும் செய்தார்களாம். இவ்விவகாரம் உதவி நிர்வாகி மூலம் சிஐடிக்கு புகார் செல்ல, மக்கள் பிரதிநிதியான சங்கர் உள்பட 15 பேர் மீது போலி ஆவணங்கள் உருவாக்கியதாக வழக்கு பாய்ந்துள்ளதாம். எந்த நேரமும் கைது நடவடிக்கை பாயலாம் என்பதால் வெளியே தலைகாட்டாமல் பதுங்கி பதுங்கி உலாவும் பிரதிநிதியானவரும், முன்ஜாமீனுக்காக நீதிமன்ற படியேறும் அவலம் வந்துள்ளதாம். தொகுதி முழுக்க இதுதான் பரவலான பேச்சாக இருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் எம்எல்ஏக்கு எதிரா 2 மாஜிக்களும் பயங்கரமா வேலை பார்க்கிறாங்க போல..’’ என கேட்டுச் சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் கோட்டை என முடியும் தொகுதியில் இலைக்கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கேட்டு வருகிறாராம். சீட் வாங்கி வெற்றி பெற்று விட்டால் நான்காம் முறையாக எம்எல்ஏ அந்தஸ்தை பெற்று விடலாமென கற்பனையில் மிதந்து வருகிறார். களநிலவரம் தெரியாமல் இப்படியொரு நினைப்புல இருக்கிறாரே என இலைக்கட்சி நிர்வாகிகள் கட்சி வாட்ஸ்ஆப் தளங்களில் எதிர்பதிவிட்டு வருகின்றனர். இவரது எண்ணத்தை அறிந்த மாஜி மந்திரிகளான உளறல்காரரும், ஷாக் துறையை கவனித்தவரும் இவருக்கு சீட் கிடைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். காரணம், ஒருவேளை 4வது முறை வென்றால், கட்சியில் முக்கிய இடத்திற்கு வந்துவிடுவார் என்பதால், இருவரும் அவரை ஓரங்கட்டும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த பெண் பிரதிநிதி தரப்பினர், இரு மாஜிக்களுக்கும் எதிராக கட்சி தலைமையிடம் புகார் மனு வழங்க தயாராக இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கவர்மென்ட் காலேஜுல நடந்த பங்ஷன் விவகாரமா மாறிப்போச்சாமே..’’ என ஆவலுடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கல்வி நிலையத்திலே அரசியல கலக்காதீங்கன்னு கவர்மென்டு எவ்வளவுதான் கத்திக்கிட்டே இருந்தாலும், செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரியே, நம்ம அதிகாரிக யாரும் காது குடுத்து கேட்கறதே இல்லை. அருவி மாவட்டத்துல இப்படித்தான் ஒரு கவர்மென்டு கல்லூரியில விழாங்கிற பெயர்ல மாணவிகளை உற்சாகப்படுத்திட்டு, இப்ப கல்லூரியே ‘குய்யோ முய்யோ’ன்னு கதறிக்கிட்டு இருக்காங்களாம். அந்த மாவட்டதுல இருக்குற ஆழமான குளம் கொண்ட ஒரு அரசு மகளிர் கலைக்கல்லூரியில ஒரு விழா பேமஸா நடந்திருக்கு. விழாவுல பேசறதுக்கு ஆளில்லைன்னுக்கிட்டு, காலேஜூக்கு 25 கம்ப்யூட்டர்கள இலவசமாக தந்த மகாராசங்கள அழைச்சிருக்காங்க. மாநாடு நடத்தி முடிச்ச நடிகர் கட்சியோட மாவட்ட செயலாளர், அப்புறமா வணிகர் சங்க நிர்வாகிகளெல்லாம் கூட்டியாந்து கொண்டாட்டம் போட்டாங்களாம்.

அதுலயும் மாநாடு நடத்தி முடிச்ச நடிகர் கட்சியோட மாவட்ட செயலாளரு, நான்தான் அடுத்த எம்எல்ஏங்கிற ரேஞ்சுக்கு வீறுநடை போட்டதோடு, மாணவிகள் மத்தியில் ‘ஓட்டுரிமையை முறையாக பயன்படுத்துங்க’ என அட்வைஸ அள்ளி விட்டுட்டு போயிட்டாரு. இத இன்ஸ்டாகிராமில வேற ஊரு, உலகத்துக்கு தெரியற மாதிரி வைச்சிட்டு, காலர தூக்கிவிட்டிருக்கிறாரு. எல்லாம் நடந்து முடிச்சப்புறம் உயர்கல்வித்துறை விசாரணை நடத்தி கல்லூரி முதல்வரையும், இங்கிலீஷ் டிப்பார்ட்மென்ட் தலையையும் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாத்திட்டாங்களாம். கவர்மென்ட் கல்லூரியில எல்ேலாரும் இப்ப கூடி கூடி இத பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் ஜிஎச்-ல என்ன பிரச்னையாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு கவர்மென்ட் அடித்தட்டு மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கணும்னு பல நடவடிக்கைகள் எடுத்து வர்றாங்க. அப்படி நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாம இருந்தா எப்படி அது ஏழை மக்களுக்கு போகும் என்ற கேள்வி எழுந்திருக்குது. இதுல குறிப்பாக சொல்லணும்னா, போன ஒரு வருஷமாகவே வெயிலூர் மெடிக்கல் காலேஜ் ஜிஎச்ல, இந்த பிரச்னையால, அடிக்கடி பப்ளிக்கும், மெடிக்கல் காலேஜ் அட்மின் பிரிவுக்கும் வாக்குவாதம் நடப்பது வழக்கமாகிடுச்சு. தலைமை அதிகாரி சரியில்லாததால, இப்படி பல பிரச்னைகள் வருதுன்னு, பலமுறை மக்கள் பிரதிநிதிகளும் மெடிக்கல் காலேஜ்ல அதிகாரிகிட்ட எச்சரிக்கை விடுத்தாங்க. அந்த எச்சரிக்கையும் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாணியில, யார் எதுக்கு போன் போட்டாலும் தலைமை அதிகாரி எடுக்குறதே இல்லையாம்.

போனவாரம் கூட அடிபட்டு வந்த ஒருவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படலையாம்.

இதனால சிகிச்சைக்கு வந்தவங்க வாக்குவாதம் செஞ்சி, பேஷண்டையே டிஸ்சார்ஜ் செய்து வேற மருத்துவமனைக்கு கொண்டு போய்ட்டாங்களாம். இப்படி தலைமை சரியில்லாம இருக்குறதால, மற்ற எவையும் சரியில்லாமத்தான் இருக்குதாம். நிலைமை இப்படி கேள்விக்குறியாக மாறிப்போனதால, ஜனங்கதான் அவஸ்தை படுறாங்க. கவர்மென்ட் எல்லாத்தையும் சீராக கொடுக்குற நிலையில, இடையில சிலர் இதுபோல நடந்துகிட்டா அது கடைசியில கவர்மென்டுக்கு தான் அவப்பெயராக போய்முடியுது. இதனால உயிர்காக்கும் மருத்துவ பிரிவுல, ஆக்டிவான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்டவங்க மட்டுமின்றி நேர்மையான மருத்துவ பிரிவு அதிகாரிகளோட கோரிக்கையாக இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா