சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறிவிழுந்து பெண் பலி: பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை: சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் 1வது தெருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் பள்ளத்தின் சிலப் அமைக்கப்படமால் இருந்துள்ளது. அதற்கு பதில் மழைநீர் வடிகால் பள்ளத்தின் மேல் மரப்பலகையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், தற்செயலாக பள்ளத்தில் பார்த்தபோது, நைட்டி அணிந்து இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலைகீழாக கிடந்தார். உடனே பொதுமக்கள் அவரை மேலே தூக்கி பார்த்த போது, அவர் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி இருந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, அப்போது சாலையோரம் வசித்து வந்த பெண் என தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் உடனே புதிய சிலாப்பை கொண்டு வந்து மூடினர்.
மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் வீரபாண்டி நகர் பகுதியில் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.