Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்; வயதை குறைத்து கூறி மோசடி; 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை திருமணம் செய்த பெண்: முதல் கணவனால் சிக்கினார்

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஸ்ரீதர்(34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். மேலும், அடிக்கடி நேரில் சந்தித்து, தங்களின் காதலை வளர்த்தனர். இந்நிலையில், மகாஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால், ஸ்ரீதர் தனது காதலை வீட்டில் கூறியுள்ளார்.

ஆனால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீதர், பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில், கடந்த 30ம் தேதி மகாஸ்ரீ, ஸ்ரீதர் திருமணம் நடைபெற்றது. அன்று மதியம் பொத்தனூர் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமகன் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண் வீட்டார் சார்பில், ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர், காதல் தம்பதி இல்லற வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கினர். இன்ஸ்டாகிராமில் தங்களது திருமணம் குறித்த போட்டோ, வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பாண்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீதர் வீட்டுக்கு காரில் ஒருவர் வந்தார். அவர், நான்தான் மகாஸ்ரீயின் முதல் கணவர் என கூறினார். மேலும், புது மணப்பெண் மகாஸ்ரீயை அவர் சரமாரியாக தாக்கினார். இதனை கண்ட ஸ்ரீதர் மற்றும் அவரது பெற்றோருக்கு தலை சுற்றியது. இதையடுத்து அங்கு குவிந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து விசாரித்தனர். அதில், கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகாஸ்ரீக்கு திருமணமாகி, 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, 42 வயதான தனக்கு 30 வயதுதான் என வயதை குறைத்து கூறி, ஸ்ரீதரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது அம்பலமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை ஸ்ரீதரின் உறவினர்கள், பரமத்திவேலூர் போலீசில் புகார் தெரிவித்து மகாஸ்ரீயை ஒப்படைத்தனர். மகாஸ்ரீ, ஸ்ரீதர் மற்றும் அவரது முதல் கணவரிடம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர், மகாஸ்ரீயை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மேலும், அவருக்கு கட்டிய 5 பவுன் தாலிக்கொடியை திரும்ப பெற்றுக் கொண்டனர். அதேபோல், முதல் கணவரும் மகாஸ்ரீ தனக்கு வேண்டாம் என கூறியதால், மகாஸ்ரீயை அவரது பெற்றோருடன் திருநெல்வேலிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.