நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 137 பகுதியில் உள்ள பாரஸ் டைரா என்ற குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பராமரிப்பாளர்கள், வெளியில் இருந்து கொண்டு வந்து விடப்படும் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் 15 மாத குழந்தையின் பெற்றோர், தங்களது குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்த போது அதன் தொடைகளில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காப்பகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்த்த ேபாது, பெண் உதவியாளர் ஒருவர் குழந்தையை முகத்தில் அடிப்பதும், வேண்டுமென்றே குழந்தையை கீழே போடுவதும், குழந்தை வலியால் கதறி அழுவதும் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண் உதவியாளரை போலீசார் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையைத் தாக்கிய பெண், 18 வயதுக்குட்பட்ட சிறுமி என்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு, சிறுமியை எப்படி நியமித்தார்கள் என்பது குறித்தும், காப்பகத்தின் உரிமம் மற்றும் பிற முறைகேடுகள் குறித்தும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.