Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தள தாக்குதல் புகார் கொடுப்பது தொடர்பாக மையம் அமைப்பு: ஒன்றிய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான சமூக வலைத்தளங்கள் தாக்குதல் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு மையம் அமைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரியும், அந்த பதிவுகளை நீக்க கோரியும் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீக்குவது, அவற்றை பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில், ஒரு பெண் ஆபாச வீடியோக்கள் போன்றவற்றால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும்போது அவர் உடனடியாக புகார் அளிப்பதற்காக ஒரு முறை புகார் அளிக்கும் வகையில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் கிடைத்தவுடன் தேசிய சைபர் கிரைம் தளத்திற்கு அந்த புகார் மாற்றப்பட்டு நடவடிக்கை தொடங்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவைப்பட்டால் மனரீதியிலான ஆலோசனை வழங்கப்படும். சட்ட உதவி தேவைப்பட்டால் இந்த மையம் சட்ட உதவிகளை வழங்கும். இந்த மையத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட ஆபாச பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மேல்முறையீடு அதிகாரிகளில் முறையிடலாம்.

புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் அந்த பதிவுகள் நீக்கப்படும்வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பதிவுகள் நீக்கப்பட்டது தொடர்பாக அப்போதைக்கப்போது பாதிக்கப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதுபோன்ற வழிகாட்டுதல்களை செயல்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்குவதற்காக ஒன்றிய தகவல் தொடர்பு மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி விசாரணையை வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.