புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் மக்களவை தலைமை கொறடா கல்யாண்பானர்ஜி கூறுகையில்,‘‘காணொலி வாயிலாக முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், கட்சியில் உள்ள எம்பிக்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார். இதில் பழி என் மீது விழுந்துள்ளது. இதனால் அந்த பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்றார்.
மக்களவையில் காரசாரமாக பேசும் கல்யாண் பானர்ஜிக்கும் இன்னொரு எம்பியான மஹூவா மொய்த்ராவுக்கும் மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் கீர்த்தி ஆசாத் எம்பியும் கல்யாண் பானர்ஜியும் பொது இடத்தில் ஒருவரையொருவர் விமர்சித்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இது கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரசின் மக்களவை குழு தலைவர் பதவியில் இருந்து சுதிப் பந்தோபாத்யாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மக்களவை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.