செயின் பறிப்பு வழக்கில் கணவர் பெயர் சேர்ப்பு; பாஜக அமைச்சர் மீது பெண் மேயர் புகார்: அரியானாவில் பரபரப்பு
மானேசர்: அரியானா மாநிலம், மானேசர் மாநகராட்சி கவுன்சிலர் தயாராமின் உறவினரான பிரதீப் என்பவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அவரிடமிருந்து தங்கச் சங்கிலி மற்றும் ரூ.12,000 ரொக்கப் பணத்தைப் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கெர்கி தவுலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஷிகோபூர் கிராமத்தைச் சேர்ந்த பரம்ஜீத் என்பவருடன், மானேசர் மாநகராட்சி மேயர் இந்திரஜித் யாதவின் கணவர் ராகேஷ் என்பவரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகேஷுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹயத்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட மேயர் இந்திரஜித் யாதவ், அரியானா மாநில பாஜக அமைச்சர் ராவ் நர்பிர் சிங் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கண்ணீர் மல்கக் கதறி அழுதார். அப்போது அவர் கூறுகையில், ‘மேயர் தேர்தலில் தனக்கு வேண்டிய வேட்பாளர் தோற்றதை அமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே அவர் எனது குடும்பத்தினரைத் துன்புறுத்துகிறார். என் கணவர் இந்த வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாகவே காவல்துறை இப்படிச் செயல்படுகிறது’ என்று அவர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டத்தின் போது மேயர் கண்ணீருடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராவ் நர்பிர் சிங்கைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானேசர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சுந்தர் லால் யாதவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு இந்திரஜித் யாதவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


