Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை கொல்கத்தாவில் மம்தா கண்டன பேரணி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை

கொல்கத்தா: பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன பேரணி நடந்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்து முதுகலை 2ம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல் முதல்வர் மம்தா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.  இதற்கிடையே நேற்று முன்தினம் அதிகாலையில் சுமார் 40 பேர் கொண்ட குழு மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவப் பிரிவு மற்றும் மருந்து விநியோகிக்கும் பிரிவு ஆகியவற்றைச் சேதப்படுத்தியது. மேலும் சிசிடிவி கேமராக்களையும் உடைத்தது. ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையையும் கும்பல் சூறையாடியது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து கொல்கத்தா தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம், நீதிபதி ஹிண்மய் பட்டாச்சார்யா அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது,’ மருத்துவமனையில் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது அரசு இயந்திரத்தின் முழுமையான தோல்வி. அங்குள்ள நிலைமை குறித்து போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனையில் 7,000 பேர் திரண்டது குறித்து உளவுத்துறைக்கு தகவல் இல்லை என்பதை நம்புவது கடினம்’ என்றனர்.

* நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

கொல்கத்தா மருத்துவர் பலாத்கார படுகொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் இன்று காலை 6 மணிமுதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் அவசர சேவைகள் தவிர மற்ற பணிகளை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.

* டாக்டர்களுக்கும் தொடர்பு பெற்றோர் குற்றச்சாட்டு

மருத்துவமனைக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவரின் பெற்றோர், அதே மருத்துவமனையில் பணியாற்றும் சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐயிடம் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்கள் மகள் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்களையும் அவர்கள் சிபிஐயிடம் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக குறைந்தது 30 பேரை விசாரணைக்கு அழைக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.