மூணாறு: மூணாறு அருகே, பலாப்பழம் பறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள பள்ளிவாசல் ஊராட்சி கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவரது மனைவி பிந்து (48). இவர், நேற்று முன்தினம் வீடு அருகே உள்ள தோட்டத்தில் பலாப்பழம் பறிக்க சென்றார். அங்கு மரத்தில் இருந்த பலாப்பழத்தை, தான் கொண்டு சென்ற கம்பியால் தட்டி பறித்தபோது, அந்த கம்பி அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசியது. இதில், மின்சாரம் தாக்கி பிந்து தூக்கி வீசப்பட்டார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத மனைவியை தேடி சன்னி சென்றார்.
அங்கு மயங்கிக் கிடந்த பிந்துவைப் பார்த்து அவர் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பிந்துவை மீட்டு அடிமாலி அரசு தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதன்பின் அவரது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.