சோன்பத்ரா: சூனியம் வைப்பதாகச் சந்தேகப்பட்டு, பெண் ஒருவரை கிராம மக்கள் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம் பர்சோயி கிராமத்தை சேர்ந்த பாபுலால் கர்வார் (57) மற்றும் அவரது மனைவி ராஜ்வந்தி (52) ஆகியோர், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு சூனியம் வைத்ததாக கிராமத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் தம்பதிகள் வீட்டில் இருந்தபோது, கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கிராம மக்கள் சிலர் அவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில், ராஜ்வந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது கணவர் பாபுலால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ‘குலாப் என்ற கிராமவாசி தலைமையில் பலர் பாபுலால் வீட்டிற்குள் புகுந்து, தம்பதியினர் மீது சூனியம் வைப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இந்த தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முக்கியக் குற்றவாளியான குலாப் கைது செய்துள்ளோம்’ என்றார்.