சென்னை: மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரம்யாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2022ல் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். சுகாதாரத்துறையில் செல்வாக்கு, அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்று கூறி அந்தோணிதாஸ், ரம்யா அறிமுகமாயினர். எம்.பி.பி.எஸ். சீட் பெற செலவாகும் என்று கூறி பல தவணைகளாக ரூ.60 லட்சம் பெற்றுள்ளனர்.
ரோஸ்மேரியை சென்னைக்கு வரவழைத்து மகளுக்கு சீட் கிடைத்துவிட்டதாகக் கூறி போலி அட்மிஷன் ஆர்டரை காட்டி மோசடி செய்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஸ்மேரி கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். பல்வேறு தவணைகளாக ரூ.29 லட்சத்தை திருப்பிக்கொடுத்தவர்கள் எஞ்சிய தொகையை தரவில்லை. 2024 ஆகஸ்டில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ரோஸ்மேரி புகார் அளித்தார். புகாரை அடுத்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த ரம்யா சோழிங்கநல்லூரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக் கூறி ரம்யா ஏற்கனவே பலரை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.