Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் வயது மூப்பினால் பெண் மோப்ப நாய் உயிரிழப்பு: அதிகாரிகள் அஞ்சலி

மீனம்பாக்கம்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி ராணி என்ற பெண் நாய்க்குட்டி பிறந்தது. பின்னர் அந்த நாய் மோப்ப நாய் பிரிவில் இணைக்கப்பட்டு, பஞ்சாப் மாநில அட்டாரியில் சிறப்பு மோப்ப பயிற்சி பெற்றது. இந்த ராணி மோப்ப நாய் வெடிகுண்டுகள், வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் மோப்ப திறன் கொண்டனது.

பின்னர் பயிற்சி முடிந்து, கடந்த 2013ம் ஆண்டு சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மோப்ப நாய் பணியில் இணைந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, கடந்த 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் 4ம் தேதி ஓய்வுபெற்றது.

பின்னர் மோப்ப நாய் ராணி, சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் பராமரிக்கும் விலங்கு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 26ம் தேதி அதிகாலை மோப்ப நாய் ராணி மயங்கிய நிலையில் கிடந்தது. பின்னர் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையில், வயது மூப்பு காரணமாக மோப்ப நாய் ராணி இயற்கையாக உயிரிழந்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் ராணியின் உடல் மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், மோப்ப நாய் ராணிக்கு, மறைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு என்ன மரியாதை அளிப்பார்களோ, அதே மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் பங்கேற்று, மோப்ப நாய் ராணியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை விமானநிலையத்தின மோப்ப நாய் பிரிவில் ராணி கடந்த 10 ஆண்டுகள், 6 மாதங்கள் பணியாற்றி வெடிகுண்டுகள், வெடிமருந்துகளை கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயலாற்றியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.