திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குடிபோதையில் குழந்தைகள் கண்ணெதிரே மனைவியை காஸ் சிலிண்டரால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளிக்கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (54). அவரது மனைவி கவிதா (46). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முந்திரி வியாபார புரோக்கரான மதுசூதனன், அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது வழக்கமாகும். நேற்று நள்ளிரவு வழக்கம்போல போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை எடுத்து கவிதாவை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பயந்த குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி பக்கத்து வீட்டினரிடம் சம்பவம் குறித்து கூறினர்.
இதுகுறித்து உடனடியாக கிளிக்கொல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது கவிதா இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதுசூதனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



