கொலையான கணவரின் சாயலில் இருப்பதாக கூறி துணை அதிபரை கட்டி தழுவிய பெண்ணால் சர்ச்சை: அமெரிக்க அரசியலில் பரபரப்பு
ஆக்ஸ்போர்டு: கணவர் கொல்லப்பட்ட துக்கத்தில் இருந்து மீளாத பெண், அமெரிக்கத் துணை அதிபருடன் பொது மேடையில் நெருக்கமாகக் கட்டித்தழுவிய நிகழ்வு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல அரசியல் ஆர்வலரும், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், கடந்த செப்டம்பர் 10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அவரது மனைவி எரிகா கிர்க் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 29ம் தேதி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடந்த அமைப்பின் நிகழ்வில் அவர் முதன்முறையாகப் பங்கேற்றார். அப்போது, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸை அறிமுகப்படுத்திப் பேசினார். கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய எரிகா, ‘எனது கணவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸிடம், என் கணவரின் சில சாயல்களைக் காண்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த வேன்ஸை, எரிகா நீண்டநேரம் கட்டித்தழுவினார். வேன்ஸின் இடுப்புப் பகுதியில் எரிகாவின் கைகளும், எரிகாவின் தலையைக் கோதியபடி வேன்ஸின் கைகளும் இருந்தன. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கணவரை இழந்த பெண், திருமணமான ஒருவருடன் இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனப் பலரும் விமர்சித்தனர். இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இந்த விவகாரம் குறித்து ஊடக நேர்காணல் ஒன்றில் பதிலளித்த எரிகா, ‘எனது ஒவ்வொரு அசைவையும் கேமராக்கள் ஆராய்கின்றன. என் கணவர் கொல்லப்பட்டதையும், நாங்கள் துக்கத்தில் இருந்ததையும் படம் பிடித்தார்கள்.
இப்போது நான் சிரித்தால் கூட சர்ச்சையாக்குகிறார்கள். ஆனால், என் கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட டைலர் ராபின்சனின் நீதிமன்ற விசாரணையை மட்டும் முழுமையாகப் பதிவுசெய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அங்கு வெளிப்படைத்தன்மைக்காக கேமராக்களை அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறி, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இந்திய வம்சாவளியான உஷாவின் மதம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது இந்த விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
