காலதாமதம் இன்றி நெல் கொள்முதல் செய்ய கூடுதல் திட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
சென்னை: நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் 47.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகமான அளவில் நெல்கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால், 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையிட்ட நவீன நெல் சேமிப்புத் தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், மாவட்ட வாரியாக கிடங்கு வசதிகளை மதிப்பாய்வு செய்து, புதிய தற்காலிகக் திறந்தவெளி கிடங்குகளை அமைக்கும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசின் பயன்பாட்டிலில்லாத கட்டிடங்கள் மற்றும் பிற துறைகளின் கிடங்குகளையும் தற்காலிக சேமிப்பிற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து நெல்லினை எவ்வித காலதாமதமும் இன்றி கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்ய கூடுதல் திட்டம் வகுத்திடவும், நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும். மேலும், எதிர்வரும் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் தாமதமின்றி நகர்வு செய்திடவும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள நெல்லினை மிகவும் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். இவற்றை கண்காணித்திட மண்டல அளவில் மேற்பார்வை அலுவலர்கள் நியமித்திடவும், மாவட்ட அளவில் கொள்முதல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


