*கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
கோவில்பட்டி : கோவில்பட்டியில் கையில் அரிவாளுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரிவாள், வாள் மற்றும் நீளமான கத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவதாக கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் அந்த போட்டோக்களும், வீடியோக்களும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் இருப்பதாக பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டவர்களை தேடும் படலத்தை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கோவில்பட்டி தாமஸ் நகர் பின்புறம் உள்ள வடக்கு திட்டங்குளம் கண்மாய் அருகே எஸ்ஐ சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலும், கையில் அரிவாள், வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிலர் நின்று கொண்டிருந்தனார்.
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனி 2வது தெருவைச் சேர்ந்த சக்தி கண்ணன் மகன் பிரவின் (19), வ.உ.சி நகர் முதல் தெருவைச் சேர்ந்த தவசிமணியின் மகன் சபேஸ்வரன் (19), புதுக்கிராமம் 6வது தெருவைச் சேர்ந்த கொம்பையா மகன் சக்திவேல் (21), சாஸ்திரி நகர் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த 17 வயது இளஞ்சிறார்கள் இருவர் என மொத்தம் 5 பேர் என்பது தெரியவந்தது.
இவர்களில் பிரவின், சபேஸ்வரன் ஆகியோர் கல்லூரியிலும், 2 சிறுவர்கள் பள்ளியிலும் படித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.