ஆழியாறு தடுப்பணையில் தடை மீறி குளிப்பதை தடுக்க ரூ.10 லட்சத்தில் கம்பி வேலி: பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிக்க செல்வதை தடுக்க ரூ.10 லட்சத்தில் இரும்பு கம்பி வேலி அமைத்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் ஆற்றோரம் உள்ள பாலத்தின் கீழ் பகுதி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட இடங்களில் குளிக்க தடை உள்ளது. இருப்பினும் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு இல்லாத நேரங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியால் தடுப்பணை பகுதிகளில் குளித்து செல்கின்றனர். சில மாதத்திற்கு முன்பு, ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்நேரத்தில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார், எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.
இதனால் அந்நேரத்தில் ஆழியாறு தடுப்பணை பகுதி வெறிச்சோடியது போல் இருந்தது.ஆனால் சமீபமாக போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியை முறையாக மேற்கொள்ளாததால் மீண்டும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க துவங்கினர். போதிய கண்காணிப்பு இல்லாததால், விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் தடை ஏற்படுத்தப்பட்ட பகுதி என்று தெரியாமல் குளித்து சென்றனர். அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் தடுப்பணை வழியாக ஆர்ப்பரித்து செல்கிறது. இந்நிலையில், ஆழமான பகுதி எது என தெரியாமல், வெளியூர் சுற்றுலா பயணிகள் தடை மீறி குளிக்கின்றனர். எனவே விபரீத சம்பவம் நடப்பதற்குள் ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளிப்போரை தடுக்கவும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, தடையை மீறி ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக, தடுப்பணை செல்லும் வழிகளில் தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.10 லட்சத்தில் இரு வழித்தடத்தில் சுமார் 7 அடி உயரத்துக்கு இரும்பு கம்பி வலை அமைத்து யாரும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் ஏற்படுத்தினர். கடந்த சில நாட்களாக தடுப்பணையில் குளிப்பதற்காக அங்கு வந்த சுற்றுலா பயணிகள், தடுப்பு இருப்பதையறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சில மாதத்திற்கு முன்பு, ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்நேரத்தில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார், எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.


