Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெறும் 15 நாட்களே குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 முதல் 19 வரை நாடாளுமன்றம் கூடுகிறது: எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பரம் 19ம் தேதி வரை நடக்கும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கி டிசம்பர் 3வது வாரம் வரை நடைபெறும். கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் வரை நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெறும் இதற்கான முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களுக்கு சேவை செய்யும் ஆக்கப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்’’ என கூறி உள்ளார். டிசம்பர் 1 முதல் 19 வரையிலும் 4 வார இறுதி நாட்கள் வருவதால் அதை தவிர்த்து 15 அமர்வர்கள் மட்டுமே குளிர்கால கூட்டத்தொடரில் நடக்க உள்ளது. கடைசியாக நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் கடும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக தினமும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தற்போது தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பும் சட்டப்போராட்டமும் நடந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் இது எதிரொலிக்கும். குளிர்கால கூட்டத்தொடரில் இவ்விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆருக்கு ஆட்சேபணை தெரிவிக்க உள்ளன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அரியானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக கூறியிருக்கும் குற்றச்சாட்டு குறித்தும் அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. இதன் முடிவும் குளிர்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். மேலும், ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னமும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவரே நிறுத்தியதாக கூறி வருகிறார். இதுதொடர்பாகவும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் வெறும் 15 நாட்கள் மட்டுமே குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது எதிர்க்கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* எந்த வேலையும் அரசுக்கு இல்லை

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘குளிர்கால கூட்டத்தொடர் நடக்க இருக்கும் தேதி வழக்கத்திற்கு மாறாக தாமதமானது மற்றும் குறைவான நாட்களை கொண்டது. வெறும் 15 வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன செய்தி தெரிவிக்கப்படுகிறது? நாடாளுமன்றத்தில் அரசு செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. எந்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை, எந்த விவாதங்களும் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை’’ என்றார்.

* நாடாளுமன்றத்தை கண்டால் பயம்

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன், ‘‘பிரதமர் மோடிக்கும் அவரது சகாக்களுக்கும், ‘பார்லிமென்ட் ஓபோபியா’ எனும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளும் மோசமான பயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் 15 நாள் குளிர்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை தூண்டுகிறது’’ என்றார்.