சென்னை: விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம் என்று தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் விமான சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். துபாய் ஏர்ஷோ 2025 இல் இந்திய விமானப்படை (IAF) தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ச்சியில் கூடியிருந்த பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமான அதன் திட்டமிடப்பட்ட எட்டு நிமிட சாகசத்தைக் காட்டத் தொடங்கியது, ஆனால் திடீரென்று கீழ்நோக்கி விழுந்து தீப்பிடித்தது. சில நொடிகளிலேயே விமானம் விழுந்து பயங்கர வெடிப்பு ஏற்பட்டதால், விமானத்தை இயக்கிய இந்திய விமானி சரியான நேரத்தில் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்பாராத விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் அடையாளம் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றாலும், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இறந்த விமானி 34 வயதான விங் கமாண்டர் நமன்ஷ் சியால், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சியால் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் எண். 45 Squadron (Flying Daggers) பிரிவைச் சேர்ந்தவர் என்றும், ஏரோ இந்தியா மற்றும் பிற ஏர் ஷோக்களிலும் தனது திறமையைக் காட்டியவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது, அவரது இழப்பு அவரது மனைவியையும், ஒரே மகளையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது மனைவியும் விமானப்படையில் பணிபுரிவதாகவும், அவரது தந்தை ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் விமானியின் குடும்பத்தினருக்கும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றிய நமன்ஷ் சியாலுக்கு தமிழ்நாடு அஞ்சலி செலுத்துகிறது. விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம். நமன்ஷ் சியால் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


