புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஏராளமான பயணிகள், தாமதங்கள் குறித்து விமான நிறுவன உதவி மையத்தை நாடி தங்கள் விமானங்கள் பற்றிய தகவல்களைத் தேடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதேபோல, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நான்கு விமானங்கள் தாமதமாக வந்தன. மேலும், பல இண்டிகோ விமான சேவைகள் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. இன்று காலை டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில உள்நாட்டு விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாமதங்கள், நேர மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

