Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் மூலம் அதிகளவில் மின் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பசுமை மின்சார உற்பத்தியை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின் உற்பத்தி செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர்மின் நிலையம், தாவரக்கழிவு, சர்க்கரை ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறன் எவ்வளவு என்பது குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை வெளியிடும். இதில், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி தமிழகத்தில் அதிக திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,649 மெகாவாட், மேற்கூரை மின் உற்பத்தி 449 மெகாவாட், விவசாய நிலங்களில் 65.86 மெகாவாட் என மொத்தமாக சூரியசக்தி மின் உற்பத்தி 7,163.86 மெகாவாட்டாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்ததால் மின் நுகர்வு தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது. அந்த வகையில், தமிழகத்தின் மின் நுகர்வை பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் ஆகியவை மிகவும் கைகொடுத்து உதவின.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் காற்றாலை மின் நிலையங்களின் மொத்த நிறுவ திறன் 8,739 மெகாவட்டாகவும், சூரிய சக்தி மின் நிலையங்களின் மொத்த நிறுவ திறன் 6,539 மெகாவட்டாகவும் உள்ளது. இவை தவிர பல்வேறு தனியார் நிறுவனங்களும், 9,019 மெகா வாட் திறனில் காற்றாலை, 8,116 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ளன.

அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அவர்களின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி அன்று மாநிலத்தில் காற்றாலை ஆற்றல் நுகர்வு 21.9 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்தது. அதற்கு அடுத்த தினம், கிட்டத்தட்ட 694 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் தென்மேற்கு காற்று வீசி வருவதால், காற்றாலைகள் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளன.

சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெளிச்சமே முக்கியம், வெப்பம் அல்ல. தற்போது, சூரியசக்தி மின்சாரமும் அதிகம் கிடைக்கிறது. அதன்படி, கடந்த ஜூன் 10ம் தேதி காற்றாலைகளில், 7.69 கோடி யூனிட்களும்; சூரியசக்தி மின் நிலையங்களில், 3.75 கோடி யூனிட் மின்சாரமும் கிடைத்துள்ளது. அன்றைய நாளின் மின் நுகர்வு, 34.76 கோடி யூனிட்கள். அதை பூர்த்தி செய்ததில், 11.44 கோடி யூனிட்களுடன் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் முதலிடத்தில் உள்ளது.

அதை தொடர்ந்து, மத்திய அனல், அணுசக்தி மின்சாரத்தின் பங்கு, 9.42 கோடி யூனிட்களாகவும்; மின் வாரிய அனல் மின்சாரத்தின் பங்கு, 7.64 கோடி யூனிட்களாகவும் உள்ளன. மீதம் இருந்த தேவையை தனியார் எரிவாயு, அனல் மின்சார கொள்முதல் மூலம் பூர்த்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் மின் நுகர்வு, தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது. ஜூன் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மாநிலத்தின் தற்போதைய மின் நுகர்வு, 35 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்ததால் மின் நுகர்வு தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது. அந்த வகையில், மின் நுகர்வை பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் மிகவும் கைகொடுத்தன.