Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மெகா வெற்றியுடன் இகா சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றாா். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக, விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி கருதப்படுகிறது. லண்டன் மாநகரில் இப்போட்டிகள் கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன.

போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வந்த நிலையில், அரை இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை வீழ்த்திய போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் (24) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்காவை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா (23) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில் அமண்டாவும், இகா ஸ்வியடெக்கும் மோதினர். நம்பர் 1 வீராங்கனை சபலென்காவை வீழ்த்தியவர் என்பதால் அமண்டா மீது அதிக எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மாறாக, போட்டி துவங்கியது முதல் இகாவின் ஆதிக்கமே காணப்பட்டது. பல இடங்களில் தடுமாற்றத்துடன் ஆடிய அமண்டா அவ்வப்போது தவறான ஷாட்டுகளை ஆடினார்.

அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இகா, முதல் செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டும் அதே பாணியில் சென்றது. கடைசியில், வெறும் 57 நிமிடங்களில் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இகா இமாலய வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

வெற்றி பெற்ற அவருக்கு ரூ. 35 கோடி பரிசாக கிடைத்தது. 2ம் இடம் பிடித்த அமண்டாவுக்கு ரூ. 17.6 கோடி பரிசு வழங்கப்பட்டது. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை இகா முதல் முறையாக தற்போது வென்றுள்ளார். தவிர, 6வது முறையாக அவர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதே சமயம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அமண்டா போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* ரூ.35 கோடி பரிசு: 114 ஆண்டு வரலாறு முறியடித்த காட்டாறு

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி வரலாற்றில் 114 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில், எதிர் போட்டியாளரை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் வென்றது இதுவே முதல் முறை. அந்த மகத்தான சாதனையை இகா ஸ்வியடெக் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், கடந்த 1911ம் ஆண்டு, விம்பிள்டன் போட்டி விதிகள் முறையாக வகுக்கப்படாத சூழ்நிலையில் நடந்த இறுதிப் போட்டியில் தோரா பூத்பியை, டொரோதே லாம்பர்ட் சாம்பர்ஸ் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. தவிர, கடந்த 1988ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த நடாஷா ஸ்வெரெவ்வை, ஜெர்மன் வீராங்கனை ஸ்டெபி கிராப், 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.