Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பின்பற்றுமா?

அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், இதர நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தனது ஆலோசனையை ஏற்காமல், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு, பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்காக இந்தியாவை மையப்படுத்தியும், சில நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.

இதில் முக்கியமானது, ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதி. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் தேவைக்கான எண்ணெய்யில் 36 சதவீதம், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

நடப்பாண்டு (2025) ஜூன் மாதத்தில் இருந்து, தினமும் 2.2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், ரஷ்யாவிடம் இருந்து மொத்தம் 52.73 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை, இந்தியா இறக்குமதி செய்தது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்ட இந்த வரியை குறைப்பதற்கு, தற்போது அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இதற்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும். அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பேசிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், ‘‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக, இந்தியா என்னிடம் ஏற்கனவே கூறியது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்தி விடும். 40 சதவீதம் அளவுக்கு நிறுத்தி விடுவார்கள். இந்தியாவின் செயல்பாடு மிகவும் சிறப்பானது என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யுமா? அல்லது அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி உலக அரங்கில் பரவலாகியுள்ளது.

இதற்கிடையில், ‘‘அமெரிக்காவை பொறுத்தவரை, அந்த நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த, நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது. தற்போதைய நிர்வாகம், இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி இருக்கிறது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது,’’ என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா, அதன் விலை கணிசமாக குறைந்த போது, அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல், எண்ணெய் நிறுவனங்களுக்கே கொடுத்தது.

தற்போது அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டாலும், இந்த நிலையே நீடிக்கும் என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ளது. இதில் இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே, எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை ஒன்றிய அரசு உண்மையாகவே பின்பற்றுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.