கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவரும், நடிகருமான விஜய் பங்ேகற்ற பிரசார கூட்டத்தில் 41 உயிர்கள், நெரிசலில் சிக்கி பலியான கொடூரம், தமிழக அரசியல் களத்தில் மறக்க முடியாத ஒரு கருப்பு சரித்திரம். இந்த கோரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், ெபண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைத்து நிலைகளிலும் உயிர்கள் தவித்தும், துடித்தும் சிதைந்து போனது பெரும் துயரமாக மாறி நிற்கிறது.
இப்படியொரு துயரம் நிகழ்வதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? என்பது மக்கள் மன்றத்தில் பெரும் கேள்வியாக எழுந்தது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கடும் கண்டனம், தற்போது இந்த கேள்விக்கான விடையை கொடுத்துள்ளது. கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒரு கட்டுப்படுத்தாத கலவரம் போல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர்கள் என்று அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், பின்தொடர்ந்தவர்களையும் விட்டுவிட்டு சென்று விட்டனர். இந்த துயரத்தில் அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மட்டும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் இறந்திருக்கும்போது, ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வுக்கு தவெக கட்சியின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் வருத்தம் தெரிவிக்க தவறியதையும் நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என்று அனைவரும் உடனடியாக வருத்தம் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் தனது வருத்தத்தை உடனடியாக பதிவு செய்யவில்லை. இது தலைவரின் மனநிலையை காட்டுகிறது. இது என்ன மாதிரியான கட்சி? தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார் நீதிபதி.
நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ள முடியாது. நீதிமன்றம் மவுனசாட்சியாக இருக்க முடியாது. நீதிமன்றம் தனது பொறுப்புகளை தவிர்க்க முடியாது. இந்த நிகழ்வின் காட்சிகளையும், விளைவுகளையும் உலகம் முழுவதும் பார்த்துள்ளது. விஜய்யின் வாகன அணிவகுப்புக்கு அருகில் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள், அவரது பேருந்துக்கு வழிவிடுவதற்கு தள்ளிவிடப்படும் ரசிகர்கள், ஆம்புலன்ஸ்கள் நுழைய முடியாமல் போராடிய போது ஏற்பட்ட குழப்பம் என்று காட்சிப்பதிவுகளையும் சாட்சியங்களாக வைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
இது ஒரு புறமிருக்க, இந்திய அரசியல் சரித்திரத்தில் எந்தவொரு கட்சி நடத்திய கூட்டத்திலும் இப்படி ஒரு பெரும் துயரம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்பது சமூக மேம்பாட்டு அமைப்புகளின் வேதனை. இதற்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பவர், அதிகாரத்தில் அமர்வது மட்டுமே எனது ஒரே இலக்கு என்ற சுயநலத்துடன் பயணிப்பவராக இருக்க கூடாது.
முதலில் தன்னை நம்பி நாடி வரும் மக்களை முழுமையாக ேநசிப்பவராக இருக்க வேண்டும். அப்படி நேசித்தால் மட்டுமே மக்களின் பாதுகாப்பு குறித்த உள்ளுணர்வு அவருக்குள் வரும். அந்த உணர்வானது இதுபோன்ற கோரங்களை தவிர்க்க வழிவகுக்கும். இந்த உணர்வானது புதிதாக அரசியலில் கால்பதித்துள்ள விஜய் போன்ற தலைவர்களுக்கு இனியேனும் துளிர்க்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.